புதிதாக 215 பேருக்கு தொற்று: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது


புதிதாக 215 பேருக்கு தொற்று: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 4 Aug 2020 12:00 AM GMT (Updated: 3 Aug 2020 6:22 PM GMT)

தூத்துக்குடியில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. நெல்லை, தென்காசியில் 2 பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டாரங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 846 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 651 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 137 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 58 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

நெல்லையில் கொரோனாவுக்கு நேற்று மேலும் 2 பேர் பலியானார்கள். நெல்லையை அடுத்த மானூர் பகுதியை சேர்ந்த 63 வயது விவசாயி ஒருவர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், அங்கு சிகிச்சை பெற்று வந்த தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சின்னநாடானூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் இறந்தார்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 26 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் அம்பையில் 17 பேர், களக்காடு, நாங்குநேரியில் தலா 3 பேர், மானூரில் 6 பேர், பாளையங்கோட்டை ஊரகப்பகுதி, வள்ளியூரில் தலா 5 பேர், பாப்பாக்குடியில் 4 பேர், ராதாபுரத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 ஆயிரத்து 289 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 2 ஆயிரத்து 297 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை அருகே கங்கைகொண்டானில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவாளர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அந்த அலுவலகம் மூடப்பட்டது. மேலும் அலுவலகத்தை சுற்றிலும் பிளச்சிங் பவுடர் தூவி, கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

நெல்லை டவுன் மொத்த மார்க்கெட்டில் உள்ள ஒரு வியாபாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவரது மொத்த வியாபார கடையை சுகாதார துறையினர் பூட்டினர். அந்த கடையை ஒரு வாரத்துக்கு மூடுவது தொடர்பான அறிவிப்பு ஆணையையும் கதவில் ஒட்டினர். மேலும், அந்த பகுதியில் கிருமி நாசினி தெளித்து, சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.

நெல்லையை சேர்ந்த பா.ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் டுவிட்டரில், “எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல் உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன். கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன். வேலுண்டு வினையில்லை” என்று கூறி உள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 397 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 1,236 பேர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 1,129 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 32 பேர் இறந்துள்ளனர்.

Next Story