நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது


நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது
x
தினத்தந்தி 4 Aug 2020 12:00 AM GMT (Updated: 3 Aug 2020 6:56 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நெல்லை,

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மூலம் இ-சேவை மையம் செயல்படுகிறது. இந்த சேவை மையம் மூலம் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், விவசாயிகளுக்கான வருமான சான்றிதழ், வேலையில்லா பட்டதாரிக்கான சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களுக்கான சான்றிதழ், விதவை பெண் சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்கான சான்றிதழ் பதிவு செய்யப்படுகின்றன.

இதுதவிர பொது வினியோக திட்டத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வதற்கும் விண்ணப்பம் செய்யப்படுகின்றன. பொதுவாகவே இ-சேவை மையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன.

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்து வருகிறார்கள். அதற்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவைகள் தேவைப்படுகின்றன. அதனால் மாணவர்களின் பெற்றோர் இ-சேவை மையங்களில் குவியத்தொடங்கி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பல இ-சேவை மையங்களில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

சமீபத்தில் இ-சேவை மையத்தின் மென்பொருளில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சில நேரங்களில் ஒரு பதிவுக்காக 30 நிமிடம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இணையதள சேவையை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று இணையதள சேவை எளிதாக கிடைத்தது.

Next Story