தமிழகத்தில் முதன் முறையாக நெல்லையில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது


தமிழகத்தில் முதன் முறையாக நெல்லையில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 4 Aug 2020 5:45 AM IST (Updated: 4 Aug 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் முதன் முறையாக நெல்லையில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஷில்பா அறிவித்தார். அதன்படி நேற்று நெல்லை கலெக்டர் அலுவலக முதல் மாடியில் உள்ள தேசிய தகவலியல் மைய அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். சில நிமிடத்திலேயே மாவட்ட இணையதள முகவரியில் பொதுமக்கள் காணொலி காட்சியில் கலந்து கொண்டனர். ஒவ்வொருவராக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலெக்டரிடம் குறைகளை தெரிவித்தனர். அதை கேட்டறிந்த கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக காணொலி மூலமாக அழைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். தமிழகத்திலேயே முதன் முறையாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நெல்லை மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

மதியம் 1.30 மணிக்கு குறை தீர்க்கும் கூட்டம் நிறைவடைந்தது. மொத்தம் 25 பேர் காணொலி காட்சியில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் நேரடியாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனுக்களை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதை தவிர்க்கவும் இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், பயிற்சி கலெக்டர் அலமேலுமங்கை, மாவட்ட தகவலியல் அலுவலர் தேவராஜன், உதவி அலுவலர் ஆறுமுக நயினார், சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் குமாரதாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நெல்லை உதவி கலெக்டர் மணிஷ்நாரணவரே, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்பட பல அதிகாரிகள், அந்தந்த அலுவலகத்தில் இருந்த படியே காணொலி காட்சியில் கலந்து கொண்டனர்.

Next Story