குடியாத்தத்தில் ரெயில் என்ஜின் மோதி வாலிபர் பலி; மோட்டார்சைக்கிளுடன் தண்டவாளத்தை கடந்த போது விபரீதம்


குடியாத்தத்தில் ரெயில் என்ஜின் மோதி வாலிபர் பலி; மோட்டார்சைக்கிளுடன் தண்டவாளத்தை கடந்த போது விபரீதம்
x
தினத்தந்தி 4 Aug 2020 4:45 AM IST (Updated: 4 Aug 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் மோட்டார்சைக்கிளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் என்ஜின் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஆலாம் பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் ரஞ்சன் (வயது 26). கூலித்தொழிலாளி. திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. யுவராணி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை சுமார் 8 மணி அளவில் ரஞ்சன் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.

அங்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு மீண்டும் சொந்த கிராமத்திற்கு செல்ல குடியாத்தம் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். ஒரு தண்டவாளத்தை கடந்து விட்டு இரண்டாவது தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்லும்போது சென்னையிலிருந்து 3 ரெயில் என்ஜின்கள் ஒன்றாக ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ரஞ்சன், மோட்டார்சைக்கிளை தண்டவாளத்தில் இருந்து சற்று தூக்கி கடப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வேகமாக வந்த ரெயில் என்ஜின் ரஞ்சன் மீது மோதி விட்டது. மோதிய வேகத்தில் ரஞ்சன் சுமார் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிள் 200 மீட்டர் தொலைவுக்கு சிறுசிறு பாகங்களாக சிதறிக் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ரெயில்வே தனிப்பிரிவு ஏட்டு சுதர்சனம், காட்பாடி ரெயில்வே சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்காக ரஞ்சனின் உடலை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story