நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாகவில்லை - வக்கீல் தகவல்


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாகவில்லை - வக்கீல் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2020 5:15 AM IST (Updated: 4 Aug 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாகவில்லை என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் பீகார் போலீசார் நடிகை ரியா சக்ரபோா்த்தி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மும்பை வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ரியா சக்ரபோர்த்தியை கண்டறிய முடியவில்லை என கூறியிருந்தனர்.

இந்தநிலையில் நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாக இல்லை என அவரது வக்கீல் சதீஷ் மானேஷிண்டே கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், “ரியா சக்ரபோர்த்தியை காணவில்லை என பீகார் போலீசார் கூறியிருப்பது சரி அல்ல. இன்று வரை பீகார் போலீசாரிடம் இருந்து அவருக்கு சம்மனோ, நோட்டீசோ வரவில்லை. மும்பை போலீசார் விசாரணைக்கு அழைத்த போது அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார்” என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சுஷாந்த் சிங் தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் அவரது வீட்டில் விருந்து நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மறுத்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நடிகர் சுஷாந்த் சிங் வீட்டில் 13 மற்றும் 14-ந் தேதிக்கான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் விருந்து நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை” என்றார். மேலும் அவர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய மும்பை போலீசார் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும், தற்கொலை சம்பவத்தில் எந்த அரசியல் கட்சி, தலைவருக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே நடிகர் சுஷாந்த் சிங்கின் கணக்கு தணிக்கையாளரான சந்தீப் ஸ்ரீதரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. சுஷாந்த் சிங்கிடம் ரூ.15 கோடி பறித்ததாக அவரது தந்தை நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது குற்றம்சாட்டி இருந்த நிலையில் அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

Next Story