கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - அமிதாப் பச்சன் உருக்கம்


கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - அமிதாப் பச்சன் உருக்கம்
x
தினத்தந்தி 4 Aug 2020 12:15 AM GMT (Updated: 3 Aug 2020 9:06 PM GMT)

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளேன் என நடிகர் அமிதாப்பச்சன் உருக்கமாக கூறியுள்ளார்.

மும்பை,

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், லேசான பாதிப்புடன் இருந்த ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் கடந்த வாரம் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர்.

இந்தநிலையில் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனும் நேற்று முன் தினம் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். அபிஷேக் பச்சன் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் வீடு திரும்பிய நடிகர் அமிதாப் பச்சன் வலைதள பக்கத்தில் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு மிகப்பெரிய நன்றிக் கடன்பட்டு இருப்பதாக உருக்கமாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனாவில் இருந்து முக்தி பெற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி இருப்பது மனநிறைவாக உள்ளது. எனினும் அபிஷேக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது கவலையாக உள்ளது. டாக்டர்கள் ஒவ்வொரு மணி நேரமும் கொரோனாவுக்கு எதிராக ஓய்வின்றி போராடி வருகின்றனர். எல்லாம் சரியாகிவிடும் என ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு உறுதி அளிக்கின்றனர். வைரசில் இருந்து நோயாளிகளை காப்பாற்ற அவர்கள் போராடி வருகின்றனர். டாக்டர்களை ‘‘வெண்ணிற ஆடை அணிந்த தேவதைகள்'' என கூறியபோது, அவர்களின் சிறந்த சேவையை அனுபவிக்க அந்த தேவதைகள் மத்தியில் நான் படுத்து இருப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை, உற்சாகம், கொரோனாவுக்கு எதிராக போராடும் பலத்தை தருகிறார்கள். அவர்கள் மிக, மிக முக்கியமானவர்கள். அவர்களுக்கான என் நன்றி கடன் எப்போதும் தீராது. அபிஷேக்கிற்காக மிகவும் வருந்துகிறேன். அவர் வீட்டுக்கு விரைவில் வர பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story