மொபட் மீது கார் மோதி கவிழ்ந்தது; தம்பதி உள்பட 3 பேர் பலி - 7 பேர் காயம்


மொபட் மீது கார் மோதி கவிழ்ந்தது; தம்பதி உள்பட 3 பேர் பலி - 7 பேர் காயம்
x
தினத்தந்தி 4 Aug 2020 4:30 AM IST (Updated: 4 Aug 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே மொபட் மீது கார் மோதி கவிழ்ந்த விபத்தில் மொபட்டில் சென்ற தம்பதி உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகள் 4 பேர் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் கே.என்.பி. சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 65). ஆடு வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ரத்தினம்(55). இவர்கள் இருவரும் ஒரு மொபட்டில் பொல்லிக்காளிப்பாளையம் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று மதியம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

அந்த காரை கோவையில் உள்ள என்.ஜி.பி. கல்லூரியில் படித்து வரும் அவினாசியை சேர்ந்த கிருத்திக் பிரணவ் (23) ஓட்டினார். அந்த காரில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களான அவினாசியை சேர்ந்த சுபாஷ்(23), மது(23) மற்றும் மாணவிகள் கோகுலப்பிரியா(23), சங்கவி(23) ஆகியோர் பயணம் செய்தனர்.

எதிர்பாராதவிதமாக கிருத்திக் பிரணவ் ஓட்டிச்சென்ற கார், சாமிநாதன் ஓட்டிச்சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. மேலும் பிளஸ்-1 பாடப்புத்தம் வாங்கிக்கொண்டு, சாலையோரம் நின்று கொண்டிருந்த குப்புச்சிபாளையத்தை சேர்ந்த மாணவி நவஸ்ரீ(17), இவருடைய தந்தை தம்புராஜ்(48), தாயார் சிவகாமி(40) ஆகியோரையும் இடித்து தள்ளியது. பின்னர் மழை நீர்வடிகாலை கடந்து, பள்ளி சுற்றுச்சுவர் மீது மோதி தலைகுப்புற கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மொபட்டும் பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் மொபட்டில் சென்ற சாமிநாதன், அவருடைய மனைவி ரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

மேலும் காயம் அடைந்த சுபாஷ், கிருத்திக் பிரணவ், மது, கோகுலப்பிரியா, சங்கவி மற்றும் பள்ளி மாணவி நவஸ்ரீ, அவருடைய தந்தை தம்புராஜ், தாயார் சிவகாமி ஆகியோர் காயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுபாஷ் இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமிநாதன், ரத்தினம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுபாஷ் உடலையும் பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story