தஞ்சை மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி - 146 பேருக்கு தொற்று உறுதி
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வரை தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 8 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 42 பேரும், கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 38 பேரும், பட்டுக்கோட்டை பகுதியில் 16 பேரும் அடங்குவர். நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 146 பேரையும் சேர்த்து தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண் மற்றும் 40 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லம் பட்டுக்கோட்டையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 141 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 ஆயிரத்து 147 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய இடங்களில் தற்போது 976 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story