அன்னவாசல் அருகே, வீட்டிற்குள் புகுந்து 30 பவுன் நகைகள் கொள்ளை - கதவு பூட்டப்படாததை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை


அன்னவாசல் அருகே, வீட்டிற்குள் புகுந்து 30 பவுன் நகைகள் கொள்ளை - கதவு பூட்டப்படாததை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 4 Aug 2020 3:45 AM IST (Updated: 4 Aug 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே கதவு பூட்டப்படாததை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்து 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர், தற்போது சொந்த ஊர் திரும்பி வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு தங்கராஜ், அவரது மனைவி ஆகியோர் வீட்டின் மாடியில் தூங்க சென்றனர். அவர்களுடைய மகளும், மகனும் வீட்டின் கதவை பூட்டாமல், வீட்டில் உள்ள அறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

கதவு பூட்டப்படாததை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், ஒரு அறையில் இருந்த 2 பீரோக்கள் மற்றொரு அறையில் இருந்த ஒரு பீரோ ஆகியவற்றை திறந்து பார்த்துள்ளனர். அதில் ஒரு பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.

நேற்று காலை எழுந்த தங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பீரோக்கள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நகை இருந்த பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து அவர்கள், அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், இலுப்பூர் துணை சூப்பிரண்டு அருள்மொழிஅரசு ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். அங்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்து 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story