பெரம்பலூர் மாவட்டத்தில், உயிரிழந்த முதியவருக்கு கொரோனா - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 18 பேருக்கு தொற்று


பெரம்பலூர் மாவட்டத்தில், உயிரிழந்த முதியவருக்கு கொரோனா - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 18 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 4 Aug 2020 4:00 AM IST (Updated: 4 Aug 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 18 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வேப்பந்தட்டை தாலுகா மெயின் ரோட்டை சேர்ந்த காதர்பாஷா(வயது 80) என்பவர் உடல்நலக்குறைவால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காதர்பாஷாவிற்கு, கடந்த 1-ந் தேதி கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பரிசோதனை முடிவு வருவதற்குள்ளேயே நேற்று முன்தினம் காதர்பாஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று வந்த கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் காதர்பாஷாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் துறைமங்கலத்தை சேர்ந்தவரும், மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவருக்கும், மேலும் துறைமங்கலத்தில் 2 பேருக்கும், அம்மாபாளையம் 5-வது வார்டு வடக்கு தெருவில் கணவரை தொடர்ந்து, அவரது 34 வயது மனைவிக்கும், 11 வயது மகனுக்கும், தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களான பெரம்பலூரை சேர்ந்த ஒருவருக்கும், விஜயகோபாலபுரத்தை சேர்ந்த 2 பேருக்கும், பெரம்பலூரை சேர்ந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர் உள்பட 2 பேருக்கும், பெரம்பலூர் பள்ளிவாசல் தெரு, வெங்கடேசபுரம், ஒகளூர், புதுவேட்டக்குடி, வாலிகண்டபுரம், திம்மூர், கீழப்பெரம்பலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 527-ல் இருந்து 546 ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,023 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி, ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் தலா ஒருவருக்கும், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும் என மொத்தம் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 304 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story