சிப்காட்டில், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - 18 பேர் கைது


சிப்காட்டில், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - 18 பேர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2020 10:40 AM IST (Updated: 4 Aug 2020 10:40 AM IST)
t-max-icont-min-icon

சிப்காட்டில், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிப்காட்(ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை ஆர்.ஆர்.ரோடு பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால் அந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி 2 டாஸ்மாக் கடைகளில் ஒன்றை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.

அதன்படி ஒரு டாஸ்மாக் கடை அங்கிருந்து மாற்றப்பட்டு சிப்காட் போலீஸ் நிலையம் எதிரே ஒரு கட்டிடத்தில் கடந்தசில நாட்களாக செயல்பட்டு வந்தது. அந்த டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளதால், அந்தக் கடையை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊரடங்கு காலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story