கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் பரிதவிப்பு தாய், 3 குழந்தைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டனர் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை


கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் பரிதவிப்பு தாய், 3 குழந்தைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டனர் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை
x
தினத்தந்தி 5 Aug 2020 12:52 AM IST (Updated: 5 Aug 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

கொட்டித்தீர்த்த கன மழையால் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. இடிந்து விழுந்த வீட்டோடு தாய், 3 குழந்தைகள் மழை நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இன்றும் பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை,

பருவமழை பெய்து வரும் மும்பையில் கடந்த ஒருவாரமாக லேசான மழையே பெய்தது.

பலத்த மழை

இந்தநிலையில் மும்பையில் 3 நாட்களுக்கு மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதில் நேற்றும், இன்றும்(புதன்கிழமை) சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுவிக்கப்பட்டது.

எச்சரிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று முன்தினம் இரவு முதல் மும்பையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய,விடிய கொட்டி தீர்த்தது. மேலும் பலத்த காற்றும் வீசியது. நேற்று காலை கடல் அலை சீற்றமும் அதிகரித்தது. ராட்சத அலைகள் சுமார் 4½ மீட்டர் உயரத்துக்கு எழும்பி வந்து கரையை தாக்கின. இதனால் மழைநீர் கடலுக்கு செல்ல முடியாமல் போனது.

கொட்டி தீர்த்த கனமழை, அலைசீற்றம் காரணமாக நேற்று காலை மும்பையே வெள்ளக்காடானது. சாலைகள் ஆறுகளாக மாறின. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. மேலும் இந்த மழை உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

தாய், 3 குழந்தைகள்

சாந்தாகுருஸ் கிழக்கு தோபிகாட்டில் உள்ள திரிமூர்த்தி குடிசை பகுதியில் சாக்கடை கால்வாய் ஓரம் கட்டப்பட்டு இருந்த மாடி வீடு ஒன்று காலை 11.30 மணியளவில் மழையால் இடிந்து விழுந்தது. மேலும் இடிந்து விழுந்த வீடு சாக்கடை கால்வாயில் கரைபுரண்டு ஓடிய மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதில் துரதிருஷ்டவசமாக அந்த வீட்டில் வசித்து வந்த 35 வயது பெண் மற்றும் அவரது 1 வயது முதல் 7 வயது வரையிலான 3 பெண் குழந்தைகள் வீட்டின் இடிபாடுகளோடு மழைநீரில் அடித்து செல்லப்பட்டனர்.

பிணமாக மீட்பு

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 3 வயது குழந்தையை உயிருடன் மீட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக தாய் மற்றும் 1½ வயது குழந்தையை பிணமாக தான் மீட்க முடிந்தது. மற்றொரு 7 வயது குழந்தையின் கதி என்னவென்று தெரியவில்லை. அந்த குழந்தையை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் மும்பை கோராய் கடற்கரை பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 2 மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மழை அளவு

மும்பையில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ஒர்லி, மலாடு, மாட்டுங்கா, வால்கேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 செ.மீ. மழையும், பி.கே.சி., சயான், போரிவிலி, தாதர், அந்தேரி, குர்லா, விக்ரோலி, காட்கோபர் உள்ளிட்ட பகுதிகளில் 20 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

மும்பை நகர்புறத்தில் சராசரியாக 23 செ.மீ. மழையும், புறநகர் பகுதியில் 20 செ.மீ. மழையும் பதிவானது.

தானே, பால்கர்

மும்பை தவிர தானே, நவிமும்பை, பால்கர் பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் தானே, கோட்பந்தர் ரோட்டில் உள்ள ஒவ்லா பகுதியில் மின்கம்பத்தை தொட்ட 15 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். வர்தக்நகர் பகுதியில் கட்டிடத்தின் மேற்பூச்சு சுவர் இடிந்து விழுந்தது. எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதவிர தானேயில் 12 இடங்களில் மரம் விழுந்ததாக போன் அழைப்புகள் வந்ததாக தீயணைப்பு துறையினர் கூறினர்.

இந்தநிலையில் இன்றும் (புதன்கிழமை) மும்பையில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலைஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Next Story