ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 20 பேர் கைது


ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 20 பேர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2020 7:31 PM GMT (Updated: 4 Aug 2020 7:31 PM GMT)

பெங்களூருவில் 4 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு ஹெண்ணூர், கொத்தனூர், பாகலூர், சம்பிகேஹள்ளி ஆகிய 4 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகஅளவில் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும், குற்ற செயல்களில் ஈடுபட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து, அந்த 4 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்களின் 34 வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அங்கு வசித்த ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த 85 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் சோதனையின் போது சிலரது வீட்டில் கள்ளநோட்டுகள் இருந்ததும், போதைப்பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் சிலர் விசா காலம் முடிந்த பின்பும் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

20 பேர் கைது

இதையடுத்து, சட்டவிரோத செயல் மற்றும் விதிமுறைகளை மீறி பெங்களூருவில் தங்கி இருந்ததாக ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் 3 பேர் கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.500, ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலர் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான 20 பேர் மீதும் ஹெண்ணூர், பாகலூர், கொத்தனூர், சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.

Next Story