நாமக்கல்லில் 39 பேருக்கு பாதிப்பு: சேலத்தில் 62 பேருக்கு கொரோனா - தர்மபுரி-2, கிருஷ்ணகிரி-16
சேலத்தில் நேற்று 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் 16 பேருக்கும், தர்மபுரியில் 2 பேருக்கும், நாமக்கல்லில் 39 பேருக் கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 66 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 46 பேர், சங்ககிரியில் 6 பேர், காடையாம்பட்டியில் 3 பேர், ஆத்தூரில் 2 பேர், மேச்சேரி, சேலம் ஒன்றியம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சேலத்தில் நூலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் உள்பட 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,931 ஆக அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த 43 வயது அரசு பஸ் டிரைவருக்கு சளி,காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல் காரிமங்கலம் மல்லிக்குட்டை மேடு அள்ளியை சேர்ந்த 32 வயது ஆண் பெங்களூருவில் இருந்து வந்தார். அவரை பரிசோதித்தபோது கொரோனா உறுதியானது. நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 2 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிவதற்கான பணியை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 792 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 535 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி, ஓசூர் ரகமத் காலனி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர், 55 வயது பெண், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 50, 21 வயது பெண்கள், பர்கூர் பகுதியில் 30, 25 வயது ஆண்கள் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் பீமாண்டப்பள்ளியில் 25 வயது வாலிபர், கூத்தனப்பள்ளியில் 22 வயது இளம்பெண் உள்பட நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,203 ஆக உயர்ந்துள்ளது. அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 16 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 801 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 2 பேர், கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 5 பேரின் பெயர்கள் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 796 ஆக குறைந்தது. இதற்கிடையே நேற்று 14 பெண்கள் உள்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 38 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story