ஊரடங்கில் கேள்விக்குறியான பராமரிப்பு பணி அலங்கோலமாக காட்சி தரும் மின்சார ரெயில் நிலையங்கள்


ஊரடங்கில் கேள்விக்குறியான பராமரிப்பு பணி அலங்கோலமாக காட்சி தரும் மின்சார ரெயில் நிலையங்கள்
x
தினத்தந்தி 5 Aug 2020 1:07 AM GMT (Updated: 2020-08-05T06:37:29+05:30)

ஊரடங்கில் பராமரிப்பு பணிகள் கேள்விக்குறியானதால் சென்னையில் மின்சார ரெயில் நிலையங்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. ரெயில் நிலைய வளாகங்களில் புதர் மண்டி கிடப்பதால் பூச்சிகள் படையெடுக்கின்றன.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக பின்பற்றப்படுகிறது.

சென்னையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரிலுள்ள பல பஸ் நிலையங்களில் காய்கறி, மீன் மார்க்கெட்கள் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன. இதுதவிர கொரோனா பரிசோதனை மையங்கள், காய்ச்சல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

அலங்கோலம்

சென்னையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இடங்களில் ஒன்றான மின்சார ரெயில் நிலையங்கள் தற்போது ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அவ்வப்போது தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. ஆனால் தண்டவாளங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் ரெயில் நிலைய வளாகங்களில் மேற்கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது.

இதனால் ரெயில் நிலைய வளாகங்கள் அலங்கோலமாக காட்சி தருகின்றன. பறவைகளின் எச்சங்களால் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக இருக்கையில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து போயுள்ளன. பல இடங்களில் மழைநீர் ஆங்காங்கே சிறிய குட்டைகள் போன்று தேங்கி இருப்பதையும் பார்க்க முடிகிறது.

பூச்சிகள் படையெடுப்பு

கோடம்பாக்கம், திரிசூலம், பரங்கிமலை, தாம்பரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ஆங்காங்கே செடி, கொடிகள் படர்ந்து புதர் போல காட்சியளிக்கின்றன. அழையா விருந்தாளிகளான பூச்சிகளும் படையெடுக்கின்றன. நடை மேம்பாலங்களும் அலங்கோலமாக காட்சி தருகின்றன. பறக்கும் ரெயில் நிலையங்களும் பாழடைந்து கிடக்கின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “தற்போது ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பராமரிப்பு பணிகளை ரெயில்வே ஊழியர்கள் கை விட்டதாகவே தெரிகிறது. இருக்கைகள் உள்ளிட்டவை சேதமடைகின்றன. எனவே தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது போல, அவ்வப்போது நடைமேடை வளாகங்களிலும் தூய்மை பணிகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்”, என்றனர்.

Next Story