2 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை: சிறுவாச்சூரில் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணி
அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படாமல், சிறுவாச்சூரில் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் பக்தர்களும், பொதுமக்களும் சாலையை கடக்கும்போது அதிக சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாகி இருந்தது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலைக்கான விரிவாக்க பணி நடைபெற்றபோதே, சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு மேற்கொண்ட அப்போதைய மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரியிடம், அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். ஆனால் மேம்பாலம் அமைக்கப்படவில்லை.
இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைத்தே தீர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மத்திய- மாநில அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததின்பேரில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.13 கோடியே 3 லட்சம் மதிப்பில் சிறுவாச்சூரில் தரைவழி மேம்பாலம் அமைப்பதற்கு, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். மேலும் அவர் சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் பிப்ரவரி 2019-ம் ஆண்டுக்குள் நிறைவடையும், என்றார். இதனால் சிறுவாச்சூர் பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராம மக்களும், பக்தர்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து பாலத்துக்கான கட்டுமான பணியின்போது வாகனங்கள் சாலையை கடந்து செல்ல வசதியாக அப்பகுதியில் அணுகுசாலை அமைக்கும் பணி மட்டுமே நடந்தது. மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று மத்திய மந்திரி கூறியது, பல்வேறு காரணங்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிறைவேற்றப்படவில்லை.
அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து 20 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. சிறுவாச்சூர் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் முன்பு மேம்பாலம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கினால் மேம்பாலம் அமைக்கும் பணிகள் 3 மாதங்கள் கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடர்ந்தது. ஆனால் பணிகள் மந்தமாகவே நடைபெற்றது. இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெறவில்லை என்றும், மேலும் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களில் தரமில்லாததை பயன்படுத்துவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கினால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் குறைந்த அளவே அந்த வழியாக சென்று வருகின்றன. சாலை விபத்துகளை தவிர்க்க இந்த காலக்கட்டத்தை பயன்படுத்தி கிடப்பில் போடப்பட்ட சிறுவாச்சூர் மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story