ஜோலார்பேட்டை, வருவாய் உதவியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா - நகராட்சி அலுவலகம் மூடல்


ஜோலார்பேட்டை, வருவாய் உதவியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா - நகராட்சி அலுவலகம் மூடல்
x
தினத்தந்தி 5 Aug 2020 3:15 AM IST (Updated: 5 Aug 2020 8:22 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் வருவாய் உதவியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி சுப்பிரமணிதெருவைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவர், ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து ஜோலார்பேட்டை அரசு டாக்டர் புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் கோபி ஆகியோர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று, அங்குப் பணியில் இருந்த வருவாய் உதவியாளரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய பெண் வருவாய் உதவியாளருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் நேற்றும், இன்றும் (புதன்கிழமை) தற்காலிமாக நகராட்சி அலுவலகம் மூடப்பட்டதாக ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும் ஜோலார்பேட்டை அருகே மேட்டுசக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஆண் திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வசிக்கும் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவர், சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதேபோல் சந்தைக்கோடியூர் மசூதியின் பின்பக்க தெருவில் 16 வயது சிறுவன், அண்ணான்டப்பட்டியில் 38, 49 வயது ஆண்கள், மாக்கனூரில் 52 வயது ஆண் உள்பட மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

குடியாத்தத்தை அடுத்த செதுக்கரை நேருஜி நகரில் 3 பேர், மீனாட்சி அம்மன் நகர், போஸ்பேட்டையில் தலர் 2 பேர், புவனேஸ்வரி பேட்டையில் 62 வயது முதியவர், நடுப்பேட்டையில் 68 வயது முதியவர் உள்பட 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வேலூர் மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story