டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளுக்கு, கடலூரில் இருந்து செயற்கை பவளப்பாறைகள் அனுப்பும் பணி - மீன் வளத்தை பெருக்குவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை


டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளுக்கு, கடலூரில் இருந்து செயற்கை பவளப்பாறைகள் அனுப்பும் பணி - மீன் வளத்தை பெருக்குவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Aug 2020 3:45 AM IST (Updated: 5 Aug 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

மீன் வளத்தை பெருக்குவதற்காக கடலூர் துறைமுகத்தில் இருந்து செயற்கை பவளப்பாறைகள் டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர்,

தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் நலன் கருதியும், மீன்களின் வளத்தை பெருக்குவதற்கும் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இயற்கையாக கடலில் உருவான பவளப்பாறைகளால் மீன்களின் வளம் பெருகி இருந்தது. இதனால் மீனவர்களின் வலைகளில் அதிகளவு மீன்கள் சிக்கி வந்தன.

காலப்போக்கில் பருவநிலை மாற்றத்தாலும், வேறு சில காரணங்களாலும் இந்த பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு செயற்கையாக பவளப்பாறைகளை உருவாக்கி, அதை தேர்ந்தெடுக்கப்பட்ட கடல்பகுதியில் போடப்படுகின்றன. இதில் பாசிகள் வளர்ந்து, இயற்கையான பவளப்பாறைகள் போல் மாறி விடுவதாக கூறப்படுகிறது. இதனால் மீன்களின் வளம் பெருகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதன் அடிப்படையில் மீன்களின் வளத்தை பன்மடங்காக பெருக்குவதற்காக, சிமெண்டு ஜல்லிகள் மூலம் பல்வேறு விதமான வடிவங்களில் செயற்கையான பவளப்பாறைகள், தற்போது கடலூர் துறைமுகம் அருகே தயாரிக்கப்படுகிறது. பின்னர் அவை லாரிகள் மூலம் கடலூர் துறைமுக பகுதிக்கு எடுத்து வரப்படுகிறது.

இதையடுத்து அந்த பவளப்பாறைகள் கோட்டியா (பெரிய சரக்கு படகு) மூலம் நாகை மாவட்டம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பவளப்பாறைகளை கடலில் போடுவதற்காக தமிழக மீன்வளத்துறை சார்பில், கடலூர் மாவட்டத்தில் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் இந்த பவளப்பாறைகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய மீன்வளத்துறை ஆராய்ச்சி நிறுவன ஆய்வறிக்கைக்கு பின் கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ரூ.3 கோடியே 9 லட்சம் செலவில் செயற்கையான பவளப்பாறைகள் அமைக்கும் பணி நடைபெறும். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Next Story