தானே, பால்கர் மாவட்டங்கள் கடும் பாதிப்பு மும்பையில் எங்கும் மழை வெள்ளம் சூறைக்காற்றால் போர்க்களமான சாலைகள்


தானே, பால்கர் மாவட்டங்கள் கடும் பாதிப்பு மும்பையில் எங்கும் மழை வெள்ளம் சூறைக்காற்றால் போர்க்களமான சாலைகள்
x
தினத்தந்தி 6 Aug 2020 12:24 AM IST (Updated: 6 Aug 2020 12:24 AM IST)
t-max-icont-min-icon

மும்பை, தானே, பால்கரில் 3-வது நாளாக கொட்டி தீர்த்த மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சூறைக்காற்றால் பல சாலைகள் போர்க்களமாக காட்சி அளித்தன.

மும்பை,

மும்பையில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மும்பை முடங்கியது. நேற்று முன்தினம் மட்டும் மும்பையில் 26.8 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை அளவாகும்.

இந்தநிலையில் 3-வது நாளாக நேற்றும் மும்பையில் பலத்த மழை பெய்தது. தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. காலை நேரத்தில் மும்பை புறநகர் பகுதிகள் மற்றும் தானே, கல்யாண், பிவண்டி, பால்கர், வசாய், விரார், தகானு, ராய்காட் பகுதிகளில் மழை கொட்டி தீா்த்தது. தானே ஒவலே பகுதியில் ஆஸ்பத்திரி காம்பவுண்ட் சுவர் சரிந்து வீட்டின் மீது விழுந்தது.

சூறாவளி காற்று

இந்தநிலையில் மதியத்துக்கு பிறகு மும்பை நகரில் 40 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறை காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக தென்மும்பை பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மெரின் டிரைவ் பகுதியில் சிக்னல் கம்பம் ரோட்டில் விழுந்தது. தென்மும்பையில் உள்ள புகழ்பெற்ற பம்பாய் பங்கு சந்தையின் பெயர் பலகையும் பலத்த காற்றுக்கு சேதமடைந்தது.

நவிமும்பை துறைமுகத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

போர்க்களம் போல...

பல சாலைகள் மரக்கிளைகள், இலைகள், குப்பைகளால் போர்க்களம் போல காட்சி அளித்தன. இந்தநிலையில் இடைவிடாமல் கொட்டி தீா்த்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிர்காவ் கடற்கரையையொட்டி சாலையில் கடல் எது, கரை எது என தெரியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தாதர் இந்து மாதா, பரேல், பிரபாதேவி, கிங்சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதுதவிர செம்பூர் ரெயில்நிலையப்பகுதி, மிலன்சப்வே, அந்தேரி சப்வே, தகிசர் சப்வே ஆகிய இடங்களிலும் மழைநீர் தேங்கியதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

ஆஸ்பத்திரியில் புகுந்த மழைநீர்

நாக்பாடாவில் உள்ள ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் மும்பை மாநகராட்சி சி.எஸ்.எம்.டி., குர்லா ஆகிய இடங்களில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வசதியாக தற்காலிக முகாம்களை அமைத்தது. மேலும் பொது மக்கள் தேவையின்றி வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் மாநகராட்சி, போலீசார் எச்சரித்து இருந்தனர்.

சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் சுமார் 50 வழித்தடங்களில் பெஸ்ட் பஸ்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டன. இதனால் அத்தியாவசிய பணியாளர்கள் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர்.

மும்பையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 நிலவரப்படி மும்பை நகரில் 23 செ.மீ. மழையும், புறநகர் பகுதியில் 6.6 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

Next Story