மும்பையில் சூறாவளி காற்றுடன் 3-வது நாளாக மழை 2 மின்சார ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின 200 பயணிகள் மீட்பு


மும்பையில் சூறாவளி காற்றுடன் 3-வது நாளாக மழை 2 மின்சார ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின 200 பயணிகள் மீட்பு
x
தினத்தந்தி 5 Aug 2020 7:21 PM GMT (Updated: 2020-08-06T00:51:41+05:30)

மும்பையில் சூறாவளி காற்றுடன் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் 2 மின்சார ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின.

மும்பை,

மும்பையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் பெய்த பேய் மழையால் மும்பை நகரமே வெள்ளக்காடானது. இந்தநிலையில் நேற்று மும்பையில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. சுமார் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் தென்மும்பை பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மரங்கள் விழுந்து பல இடங்களில் கார்கள், கட்டிடங்கள் சேதமடைந்தன. அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்த ராட்சத பெயர் பலகைகளும் சேதமடைந்தன.

இதேபோல இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாதர், பரேல், மாட்டுங்கா, சயான், செம்பூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கிர்காவ் போன்ற தென்மும்பை பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் இடுப்பளவுக்கு தேங்கியது.

வெள்ளத்தில் சிக்கிய ரெயில்கள்

இதற்கிடையே அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்படும் 2 மின்சார ரெயில்கள் மழை வெள்ளத்தில் சிக்கின. மாலை வேளையில் மஜித்பந்தர் ரெயில்நிலைய பகுதியில் கர்ஜத்தில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த ஒரு மின்சார ரெயிலும், சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்பட்டு வந்த ஒரு மின்சார ரெயிலும் தண்டவாளத்தை வெள்ளம் சூழ்ந்ததால் நகர முடியாமல் நின்றன. இதனால் ரெயில் பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இந்தநிலையில் ரெயில்வே போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் போராடி ரெயில்களில் இருந்த சுமார் 200 பேரை மீட்டனர். மேலும் தகவல் அறிந்து தேசிய மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் படகுகள் மூலம் மின்சார ரெயில்களில் சிக்கிய மேலும் பல பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தானே, பால்கர்

முன்னதாக மழை காரணமாக பல இடங்களில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதாலும், கிராண்ட் ரோடு பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி மீது மரம் விழுந்ததாலும் மத்திய, மேற்கு ரெயில்வே, துறைமுக வழித்தடத்தில் ரெயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதேபோல மும்பையில் நேற்று சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் சாலை போக்குவரத்தும் முடங்கியது.

மும்பை அருகே உள்ள தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இதில் குறிப்பாக பால்கர் மாவட்டம் தகானு பகுதியில் 35 செ.மீ. மழையும், தானே மாவட்டம் பயந்தரில் 17 செ.மீ. மழையும் பெய்ததால் அந்த பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்தன.

Next Story