பீனியா கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் துணை முதல்-மந்திரி திறந்து வைத்தார்


பீனியா கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் துணை முதல்-மந்திரி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 6 Aug 2020 1:14 AM IST (Updated: 6 Aug 2020 1:14 AM IST)
t-max-icont-min-icon

பீனியா கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையம் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த மையத்தை நேற்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி திறந்து வைத்தார்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் பீனியா பகுதியில் ரூ.40 கோடி செலவில் பசவேஸ்வரா என்ற பெயரில் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிலையத்தை கட்டி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் நகருக்கு வெளியே இந்த பஸ் நிலையம் அமைந்து இருப்பதால் யாரும் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்துவது இல்லை. இதனால் அந்த பஸ் நிலையம் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், பீனியா கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தை 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வந்தன. அந்த பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு....

இதையடுத்து நேற்று பீனியா கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் அமைக் கப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை கர்நாடக போக்குவரத்து துறையை தன் வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி திறந்து வைத்தார். மேலும் அந்த சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் லட்சுமண் சவதி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

யாருக்கும் பயன்படாமல் இந்த பஸ் நிலையம் இருந்தது. ஆனால் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாறி உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது இந்த சிகிச்சை மையத்தில் 200 படுக்கைகள் உள்ளன. விரைவில் 100 படுக்கைகள் கூடுதலாக சேர்க்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்படும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த மையத்தில் 50 சதவீதம் படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. 10 சதவீத படுக்கைகள் ரோட்டரி சங்கத்தால் அனுப்பி வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும். மீதம் உள்ள 40 சதவீத படுக்கைகள், மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்படும். இந்த சிகிச்சை மையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், வரவேற்பாளர்கள், பராமரிப்பாளர்கள் பணியில் இருப்பார்கள். ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. நோயாளிகளுக்கு தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story