உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது


உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 5 Aug 2020 8:01 PM GMT (Updated: 5 Aug 2020 8:01 PM GMT)

உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஜைகோவ்-டி தடுப்பூசியின் 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது.

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அவை ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி, ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் ஆகும்.

இவ்விரு தடுப்பூசிகளையும் மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது அனுமதியை ஏற்கனவே அளித்துள்ளது.

ஜைகோவ்-டி தடுப்பூசி

இந்த நிலையில் பிளாஸ்மித் டி.என்.ஏ. அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஜைகோவ்-டி தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற முதல் கட்ட சோதனை கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த சோதனையில் தடுப்பூசி பொறுத்துக்கொள்ளத்தக்கது, பாதுகாப்பானது என்பது தெரிய வந்துள்ளது.

முன்னதாக இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பொறுத்துக்கொள்ளத்தக்கது, நோய் எதிர்ப்புத்திறன் உருவாக்குகிறது என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது.

விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையிலும், இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடி) உருவாக்கும் என்பது தெரிய வந்தது.

இன்று தொடங்குகிறது

இதுபற்றி ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் ஆர்.படேல் கூறுகையில், “ எங்கள் தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முதல் கட்ட சோதனை முடிந்திருப்பது முக்கிய மைல் கல் ஆகும். எங்கள் தடுப்பூசி பாதுகாப்பானது என கண்டறியப்பட்டுள்ளது. நாங்கள் இப்போது 2-வது கட்ட சோதனையை தொடங்குகிறோம். ஒரு பெரிய மக்கள் தொகையில் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் மதிப்பிடப்படும்” என குறிப்பிட்டார்.

இந்த 2-ம் கட்ட சோதனை இன்று (6-ந் தேதி) தொடங்குகிறது.

இந்த சோதனையின்போது தடுப்பூசியின் ‘ஹியூமோரல்’ நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் ‘செல்லுலார்’ நோய் எதிர்ப்புசக்தி மதிப்பீடு செய்யப்படும். தடுப்பூசியால் வெளிப்படுத்தப்படுகிற ஆன்டிபாடிகளின் வைரஸ் கொல்திறன் அளவிடப்படும்.

கோவிஷீல்டு தடுப்பூசி

இதற்கு மத்தியில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படுகிற தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட சோதனைகளை புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் அடுத்த சில நாட்களில் நடத்த உள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேருக்கு 17 இடங்களில் இந்த தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.

கோவேக்சின் தடுப்பூசி

பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் கூட்டாக உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசியை முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை நிறைவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றினை தடுத்து நிறுத்துவதற்கு ஏதுவாக பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை உருவாக்குவதற்கு 6 தடுப்பூசிகள் போட்டியிடுவதாகவும், அவை இறுதி கட்ட சோதனைக்குள் வந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story