தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி உணவு செலவுக்காக ரூ.200 வழங்க உத்தரவு அமைச்சர் தகவல்


தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி உணவு செலவுக்காக ரூ.200 வழங்க உத்தரவு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2020 1:42 AM IST (Updated: 6 Aug 2020 1:42 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கபட்டுள்ள நோயாளிகளுக்கு ஒரு நாள் உணவுக்காக ரூ.200 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 மாதத்தில் இல்லாத அளவு அதிகபட்சமாக ஒரே நாளில் 286 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் படுக்கைகள் பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 4 தனியார் மருத்துவக் கல்லூரியில் தலா 100 படுக்கைகள் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளன.

ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் 20 படுக்கைகள் உள்ளன. மேலும் 250 படுக்கைகளை 5 நாட்களுக்குள் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரியில் தற்போது 60 படுக்கைகள் உள்ளன. கூடுதலாக 140 படுக்கைகளும் ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளனர். எனவே 6 மருத்துவக் கல்லூரியில் நமக்கு 900 படுக்கைகள் கிடைக்கும். புதிதாக 6 ஆம்புலன்ஸ்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரவு

கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளில் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் செய்வதற்கு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கபட்டுள்ள நோயாளிகளுக்கு ஒரு நாள் உணவுக்காக ரூ.200 வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல் தேவையான உபகரணங்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story