புதிதாக 199 பேருக்கு கொரோனா: நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 3 பேர் பலி தென்காசியில் 121 பேருக்கு தொற்று


புதிதாக 199 பேருக்கு கொரோனா: நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 3 பேர் பலி தென்காசியில் 121 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 6 Aug 2020 1:34 AM GMT (Updated: 2020-08-06T07:04:15+05:30)

நெல்லை, தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் பலியானார்கள். தென்காசியில் 121 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தை எட்டி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறையத் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் மற்றும் சளி மாதிரிகள் சேகரிப்பு முகாம்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினமும் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று காயல்பட்டினத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளார். திருச்செந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 210 ஆக அதிகரித்து உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 311 ஆக உயர்ந்து உள்ளது. 1,840 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லையில் ஒருவர் பலி

நெல்லை மாவட்டத்தில் நேற்று 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நெல்லை மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 20 பேரும், களக்காடு, சேரன்மாதேவி, அம்பை, வள்ளியூர், ராதாபுரம், மானூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களை தனிமைப்படுத்தி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,820-ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை பேட்டையைச் சேர்ந்த 75 வயதான முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 167 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

தென்காசியில் 121 பேர்

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஆலங்குளத்தைச் சேர்ந்த 7 பேர், கடையத்தைச் சேர்ந்த 2 பேர், கடையநல்லூரைச் சேர்ந்த 7 பேர், கீழப்பாவூரைச் சேர்ந்த 21 பேர், குருவிகுளத்தைச் சேர்ந்த 9 பேர், மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த 2 பேர், சங்கரன்கோவிலைச் சேர்ந்த 7 பேர், செங்கோட்டையைச் சேர்ந்த 20 பேர், தென்காசியைச் சேர்ந்த 41 பேர், வாசுதேவநல்லூரைச் சேர்ந்த 4 பேர், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,564 ஆக உயர்ந்துள்ளது.

Next Story