சுரண்டை அருகே ஆடு திருடும் முயற்சியில் பயங்கர மோதல்: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை


சுரண்டை அருகே ஆடு திருடும் முயற்சியில் பயங்கர மோதல்: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
x

சுரண்டை அருகே ஆடு திருடும் முயற்சியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரண்டை,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 55). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே நாச்சியார்புரம் பகுதியில் இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.

அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்வெளியில் ஆட்டுக்கிடை அமைத்து, அதில் இரவில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். அந்த ஆட்டுக்கிடையிலேயே அய்யனாரும் தங்கியிருந்து ஆடுகளை பாதுகாத்து வந்தார்.

ஆடு திருட முயற்சி

நேற்று முன்தினம் இரவில் அய்யனார் வழக்கம்போல் நாச்சியார்புரத்தில் ஆட்டுக்கிடையில் ஆடுகளை அடைத்து வைத்து விட்டு, அங்கேயே தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு பக்கத்து ஊரான நெட்டூரைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து, ஆடு திருட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது ஆடுகளின் சத்தம் கேட்டு கண்விழித்த அய்யனார், ஆடு திருட முயன்ற கும்பலை தடுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து அய்யனார் அருகில் இருக்கும் கிடாரக்குளத்தைச் சேர்ந்த பட்டன் (55) என்பவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இருதரப்பினர் பயங்கர மோதல்

உடனே, பட்டன் தன்னுடைய மகன்கள் காளிராஜ் (25), உச்சிமாகாளி (23) மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 5 பேரை அழைத்து கொண்டு 3 மோட்டார் சைக்கிள்களில் நாச்சியார்புரத்தில் அய்யனார் ஆட்டுக்கிடை அமைத்து இருந்த வயல்வெளி பகுதிக்கு விரைந்து சென்றார். தொடர்ந்து பட்டன் உள்ளிட்ட 6 பேரும் அய்யனாருடன் சேர்ந்து, ஆடு திருட முயன்ற கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இருதரப்பினர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவர்கள், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.

வாலிபர் வெட்டிக்கொலை

இதில் நெட்டூரைச் சேர்ந்த சண்முகையா மகன் விஜய் என்ற முத்துபாண்டிக்கு (24) சரமாரி வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும், அவரது நண்பரான முருகன் மகன் பார்த்தீபனும் (25) படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பார்த்தீபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோன்று எதிர்தரப்பைச் சேர்ந்த பட்டன், அவருடைய மகன்கள் காளிராஜ், உச்சிமாகாளி ஆகிய 3 பேருக்கும் பலத்த அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்கள் 3 பேரையும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

12 பேர் மீது வழக்கு

இதுகுறித்து அய்யனாரின் உறவினரான கணேசன் அளித்த புகாரின்பேரில், பார்த்தீபன், மாரி, கார்த்திக் ராஜா, பெரியதுரை, சுந்தர் உள்பட 6 பேர் மீதும், முருகனின் மனைவி செல்வி அளித்த புகாரின்பேரில், பட்டன், அவருடைய மகன்கள் காளிராஜ், உச்சிமாகாளி மற்றும் மணிகண்டன், வேல்முருகன், மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த செல்லத்துரை ஆகிய 6 பேர் மீதும் வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடு திருடும் முயற்சியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story