‘பப்ஜி’ விளையாட பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


‘பப்ஜி’ விளையாட பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2020 2:23 AM GMT (Updated: 2020-08-06T07:53:54+05:30)

குரிசிலாப்பட்டு அருகே செல்போனில் “பப்ஜி” விளையாட பெற்றோர் செல்போன் வாங்கித்தராததால், பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

வேலூர்,

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுகே ஓமக்குப்பம் கொல்லக்கொட்டாய் பகுதியைச் சார்ந்தவர் திருமூர்த்தி. இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 15). மிட்டூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பு சென்ற நிலையில் நேற்று பள்ளிக்குச் சென்று இலவச பாடப்புத்தகங்களை வாங்கி வந்தான்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்தசில மாதங்களாக பள்ளி மாணவர்கள் தங்களின் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். அவர்களும், அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்களும் தங்களின் பெற்றோர் செல்போனில் ‘பப்ஜி கேம்’ உள்பட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்து வருகிறார்கள்.

தற்கொலை

இதைக் கண்ட தினேஷ்குமாரும் தனது பெற்றோரிடம் செல்போன் ஒன்றை வாங்கி தரும்படி கேட்டுள்ளான். விவசாய கூலித்தொழிலாளியான பெற்றோரால் மகனுக்கு செல்போன் வாங்கி தரமுடியாத நிலையில் இருந்துள்ளனர். கிராமத்தில் பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்த சக நண்பர்களுடன் அமர்ந்து ரசித்துப் பார்த்து வந்ததுடன், அதை விளையாட ஆசைப்பட்டு நண்பர்களிடம் தினேஷ்குமார் செல்போன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அவருக்கு விளையாட யாரும் செல்போன் தராததால், தான் பப்ஜி கேம் விளையாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த அவன் நண்பர்களின் வீட்டில் இருந்து நேராக வீட்டுக்கு வந்து, யாரும் இல்லாத நேரத்தில் தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

கிராம மக்கள் சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

Next Story