செஞ்சி அருகே, கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு - சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி தடுத்தனர்


செஞ்சி அருகே, கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு - சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி தடுத்தனர்
x
தினத்தந்தி 6 Aug 2020 3:30 AM IST (Updated: 6 Aug 2020 8:13 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி கிராமத்துக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதுடையவர். இவர் தனது குடும்பத்துடன் செஞ்சியில் விழுப்புரம் சாலையில் வசித்து வந்தார். மேலும் காந்தி கடைவீதியில் மளிகை கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக நேற்று முன்தினம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அவரது பரிசோதனை முடிவு வெளியான நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி, அவரது சொந்த ஊரான மேல்எடையாளம் கிராமத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்பேரில் சுகாதாரத்துறையினரின் வழிகாட்டுதலின் படி ஆம்புலன்சில் உடலை ஏற்றி, அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த மேல்எடையாளம் கிராம மக்கள், தங்களது கிராமப்பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். கிராமத்துக்கு வரும் அனைத்து சாலைகளின் குறுக்கேயும் பள்ளம் தோண்டியும், கட்டைகளை போட்டும் தடுப்புகளை ஏற்படுத்தினர். மேலும் இரவு முழுவதும் கிராம மக்கள் கண்விழித்து இருந்தனர்.

இதன் காரணமாக, இறந்தவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம், இறந்தவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்போது நாங்கள் வசித்து வரும் செஞ்சி பகுதியிலேயே உடலை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து செஞ்சி கொத்தமங்கலம் பெரிய காஞ்சிகுளம் மசூதி அருகே சுகாதாரத்துறையினரின் மேற்பார்வையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story