சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை


சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை
x
தினத்தந்தி 6 Aug 2020 8:14 PM GMT (Updated: 6 Aug 2020 8:14 PM GMT)

மும்பையில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் நேற்று முன்தினம் இரவு வரை 3 நாட்களாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

மும்பை,

இதில் நேற்று முன்தினம் மாலை வேளையில் நகரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மும்பை நகரம் பந்தாடப்பட்டது. ஒருசில நேரங்களில் மணிக்கு சுமார் 106 கி.மீ. வேகத்திலும், மற்ற நேரங்களில் 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் சூறை காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரலாறு காணாத இந்த மழையால் மும்பையே வெள்ளத்தில் மிதந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரில் 33.1 செ.மீ. மழையும், புறநகரில் 16.2 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

கடந்த 46 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும்.

362 மரங்கள் சாய்ந்தன

சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மும்பை நகரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 362 மரங்கள் சாய்நதன. மரங்கள் விழுந்ததில் ஏராளமான வாகனங்கள் நொறுங்கின. மேலும் பல வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்தன.

நகரில் 15 இடங்களில் சுவர் இடிந்து விழுந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரம் சாய்ந்ததாலும், நிலச்சரிவு காரணமாகவும் சாலைகள் போர்க்களம் போல காட்சி அளித்தன. பல சாலைகள் துண்டிக்கப்பட்டன.

290 பேர் மீட்பு

மஜித் பந்தர் பகுதியில் தண்டவாளத்தை சூழ்ந்த வெள்ளத்தில் 2 மின்சார ரெயில்கள் சிக்கியதில் 290 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக ரெயில்வே தெரிவித்து உள்ளது. இதேபோல மஜித்பந்தர் மோட்டார் பம்ப்பில் மின்சாரம் தாக்கி ரெயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

மும்பை தவிர தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களும் பலத்த மழையால் சேதத்தை சந்தித்தன.

நவிமும்பை டி.ஒய். பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் 24 அடி நீள பைபர் மேற்கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டது. ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் 3 ராட்சத கிரேன்கள் சரிந்து விழுந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பலத்த சேதத்தை சந்தித்த மும்பையில் மீட்பு பணிகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியது.

முதல்-மந்திரி ஆய்வு

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெள்ளப்பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை நேற்று ஆய்வு செய்தார். அவர் வெள்ளப்பாதிப்புகள் குறித்து சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். சாய்ந்த மரங்கள் மற்றும் இடிபாடுகளை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டார். மேலும் மீட்பு பணிகளை முடுக்கி விட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல கோலாப்பூர் பஞ்சகங்கா, ரத்னகிரி கோடாவிலி, ராய்காட் குண்டாலிகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்படவும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே பிரதமர் மோடி உத்தவ் தாக்கரேயை தொடர்பு கொண்டு வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மராட்டியத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.

இன்னும் 4 நாட்களுக்கு மழை

இதற்கிடையே நேற்றும் மும்பையில் காற்றுடன் மழை பெய்தது. பெடர் ரோட்டில் சுவர் இடிந்து சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மும்பை, தானே, பால்கரில் லேசான மழையே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் பொது மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Next Story