கர்நாடகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை


கர்நாடகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2020 8:27 PM GMT (Updated: 6 Aug 2020 8:27 PM GMT)

கர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குடகு, சிக்கமகளூரு, ஹாசன் உள்ளிட்ட மலைநாடு பகுதிகள் மற்றும் வட கர்நாடகத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பல இடங்களில் சாலைகள், பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில் மழை வெள்ளம் தொடர்பாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக அதிக மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து 19 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன். வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் அதிக மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. இத்தகைய நிலை மீண்டும் ஏற்படலாம் என்று கருதி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளுக்கு உரிய அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கலெக்டர்களுக்கு உத்தரவு

கர்நாடகத்தில் பெய்து வரும் மழை, அணைகளின் நீர்மட்டம், மழை முன்அறிவிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்குமாறு அந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

காவிரி படுகையில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாகும் நிலை இருக்கிறது. இன்று (நேற்று) 11 மாவட்ட கலெக்டர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி, வெள்ளத்தால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

முறிந்து விழுந்த மரங்கள்

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி, மூடிகெரே உள்ளிட்ட பகுதிகளில் சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உடுப்பி மாவட்டம் பைந்தூர் பகுதியில் ஒரே நாளில் 150 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

முறிந்து விழுந்த மரங்களை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சிவமொக்கா மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்துள்ளது. ஹாசனில் எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி எனது தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில், வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டால் அதை சமாளிக்க தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

3 நாட்களுக்கு பலத்த மழை

வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியான உத்தரகன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா, மலைநாடு பகுதிகளான சிவமொக்கா, குடகு, ஹாசன், சிக்கமகளூரு, வட உள்மாவட்டங்களான பெலகாவி, தார்வார், ஹாவேரி, பீதர், தென் உள்மாவட்டங்களாக தாவணகெரே, மைசூரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிப்பை வெளியிட்டுள்ளது.

மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தின் எல்லையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர்வெளியேற்றம் குறித்து கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய இயற்கை பேரிடர் குழுக்கள், குடகு, தார்வார், பெலகாவி, தட்சிண கன்னடா மாவட்டங்களிடம் முகாமிட்டுள்ளன.

இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

Next Story