தஞ்சை மாவட்டத்தில் அரசு டாக்டர் உள்பட 162 பேருக்கு கொரோனா: 2 பேர் சாவு


தஞ்சை மாவட்டத்தில் அரசு டாக்டர் உள்பட 162 பேருக்கு கொரோனா: 2 பேர் சாவு
x
தினத்தந்தி 7 Aug 2020 4:20 AM IST (Updated: 7 Aug 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் அரசு டாக்டர் உள்பட 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் அரசு டாக்டர் உள்பட 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இறந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் 3 ஆயிரத்து 322 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரு நாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு டாக்டர், வங்கி அதிகாரிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோரும் அடங்குவர்.

பட்டுக்கோட்டை தாலுகாவில் 29 பேர், பாபநாசம் தாலுகாவில் 26 பேர், கும்பகோணம் தாலுகாவில் 24 பேர், திருவையாறு தாலுகாவில் 23 பேர், தஞ்சை தாலுகாவில் 19 பேர், பேராவூரணி தாலுகாவில் 18 பேர், ஒரத்தநாடு தாலுகாவில் 12 பேர், பூதலூர் தாலுகாவில் 6 பேர் உள்பட மொத்தம் 162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரிய வந்தது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 91 பேர் குணம் அடைந்ததை தொடர்ந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 2,567 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கும்பகோணம் கொத்தன் செட்டி தெருவை சேர்ந்த 75 வயது முதியவர், தஞ்சை பாலாஜி நகரை சேர்ந்த 45 வயது ஆண் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

கூர்நோக்கு இல்ல சிறுவனுக்கு கொரோனா

பட்டுக்கோட்டையை சேர்ந்த தேங்காய் வியாபாரி கொலை வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் கைது செய்தனர். இவர்களில் 17 வயது சிறுவன், தஞ்சையில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். பின்னர் அவனை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கொரோனா தொற்று இருக்கிறதா? என பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவனை தஞ்சையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று வெளிவந்த கொரோனா பரிசோதனை முடிவில் சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் வல்லத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். மேலும் கூர்நோக்கு இல்லத்தில் ஏற்கனவே வெவ்வேறு வழக்கில் அடைக்கப்பட்டிருந்த முத்துப்பேட்டை மற்றும் நாகையை சேர்ந்த 2 பேரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு அந்த இல்லம் மூடப்பட்டது.


Next Story