குறுவை பயிருக்கு காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு - கால நீட்டிப்பு வழங்க அரசுக்கு கோரிக்கை
குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் காப்பீடு செய்ய முடியாமல் ஏராளமான விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
டெல்டா மாவட்டங்களில் 3½ லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் காப்பீடு செய்ய முடியாமல் ஏராளமான விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் அகிய மாவட்டங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். குறுவைக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படும்.
11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குறித்த காலத்தில் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கரிலும் குறுவை சாகுபடி நடந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 3 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கரை தாண்டி தற்போது 3 லட்சத்து 53 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடு ஏதும் நிகழ்ந்தால் விவசாயிகளை பாதுகாக்க பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் குறுவை நெற்பயிரை காப்பீடு செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறுவை பயிருக்கு காப்பீடு செய்வதற்கான பிரீமிய தொகை செலுத்த கடந்த மாதம் 31-ந் தேதியை கடைசி நாளாக அரசு அறிவித்தது.
ஆனால் கொரோனா பொதுமுடக்கம், பொருளாதார நெருக்கடி காரணமாக சில இடங்களில் குறுவை சாகுபடி தாமதமாக தொடங்கப்பட்டது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டதுடன், சில பகுதிகளில் சாப்ட்வேர் பிரச்சினை போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் இருந்ததால் கூட்டுறவு கடன் சங்கங்களில் பிரீமிய தொகையை விவசாயிகளால் செலுத்த முடியவில்லை.
பொது இ-சேவை மையங்களிலும் 29-ந் தேதி மாலையுடன் பிரீமிய தொகை செலுத்துவது நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான விவசாயிகள் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேர பிரீமிய தொகையை 31-ந் தேதிக்குள் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி மட்டுமே பயிர் காப்பீட்டுக்கான பிரீமிய தொகை செலுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 985 விவசாயிகள் 74 ஆயிரத்து 893 ஏக்கர் சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீட்டுக்கான பிரீமிய தொகையை செலுத்தியுள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 540 விவசாயிகள் 47 ஆயிரத்து 677 ஏக்கர் சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீட்டுக்கான பிரீமிய தொகையை செலுத்தியுள்ளனர். இன்னும் ஏராளமான விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே குறுவை பயிர் காப்பீட்டுக்கான பிரீமிய தொகையை செலுத்த வருகிற 15-ந் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பது அனைத்து விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
இது குறித்து புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி பரமசிவம் என்பவர் கூறும்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் காப்பீடு செய்யும் பணி போதிய அளவில் மேற்கொள்ளப்படாததால் மிக குறைந்த அளவாக 1.63 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறுவை நெல் அறுவடையின்போது இயற்கை சீற்றம் ஏற்பட்டால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மகசூல் இழப்பு ஏற்பட்டால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம். எனவே பிரீமிய தொகையை செலுத்த காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்றார்.
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கோ.அன்பரசன் கூறும்போது, 11 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் மகிழ்ச்சியாக குறுவை சாகுபடியை மேற்கொண்டாலும் பயிர் காப்பீடு திட்டத்தில் அனைவரும் சேர முடியவில்லை. பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகள் உரிய காலத்தில் பிரீமிய தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏதாவது இயற்கை பேரிடர் ஏற்பட்டால் நெற்பயிர்கள் முழுமையாக பாதிக்கப்படும். அந்த நேரத்தில் காப்பீட்டு தொகை பெற முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்படும். எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயனடையும் வகையில் பிரீமியம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும். 2019-20-ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story