திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்: அமைச்சர் காமராஜ் பேட்டி


திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்: அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2020 11:47 PM GMT (Updated: 6 Aug 2020 11:47 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

நீடாமங்கலம், 

நீடாமங்கலத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருவாரூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர் தலைமை தாங்கினார். துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) மரு விஜயகுமார் வரவேற்றார். முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காதவரை அச்சம் இருக்கத்தான் செய்யும். எல்லா நாடுகளிலும் மருந்து கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உயிருக்கு ஆபத்து என்கிற போது மருந்து தயாரிப்பது தேவையாக உள்ளது. அம்மை, காலரா, போலியோ போன்ற நோய்களுக்கு மருந்து உள்ளது. உலகத்திலேயே இந்தியா தான் போலியோவை விரட்டியுள்ளது. போலியோ தடுப்பில் நாம் வெற்றி கண்டுள்ளோம்.

வாழ்க்கை சுழற்சிக்குள் தான் வாழ வேண்டியுள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்கும் போது அலட்சியம் கூடாது. கொரோனா தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து அரசு காப்பாற்றும். ஆனால் தொற்று வராமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். உலகத்திலேயே தமிழகத்தில் தான் கொரோனா தொற்று இறப்பு எண்ணிக்கை குறைவு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலட்சுமி, தாசில்தார் மதியழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அடிக்கடி ஆய்வு நடத்தி எடுத்துவரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்றினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 78.55 சதவீதமாக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

நடிகர் எஸ்.வி.சேகர் அ.தி.மு.க.வில் இருந்தவர். கட்சி கொடி போட்ட காரில் சென்று இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வாக்கு கேட்டு வெற்றி பெற்றவர். இவர் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பதாக சொல்லி கொள்கிறார். ஆனால் பா.ஜ.க.வினர் அவரை ஏற்று கொள்ளவில்லை. சிரிப்பு நடிகர் வடிவேல் ஒரு படத்தில் நானும் ரவுடிதான் என்று சொல்லி கொள்வதை போல எஸ்.வி.சேகர் தான் தன்னை தானே பா.ஜ.க. என சொல்லி கொள்கிறார். பா.ஜ.க.விற்கு ஏற்பட்ட கரும்புள்ளி எஸ்.வி.சேகர்.

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் தொடரும் என எடப்பாடி பழனிசாமி சொல்லி விட்டார். மத்திய அமைச்சரே இந்தி திணிப்பு கிடையாது என்று சொல்லி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story