திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கலைநிகழ்ச்சிகள் கிடையாது - ஆலோசனை கூட்டத்தில் தகவல்


திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கலைநிகழ்ச்சிகள் கிடையாது - ஆலோசனை கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 7 Aug 2020 12:14 AM GMT (Updated: 7 Aug 2020 12:14 AM GMT)

திருவண்ணாமலையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனன கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.

கூட்டத்தில் வருவாய்த் துறை மூலமாக விழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல், குடிநீர், தற்காலிக கழிவறை உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் அமைத்தல், பாராட்டு சான்றிதழ், அரசு நலத்திட்ட உதவிகள், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல் உள்பட அனைத்து பணிகளும், காவல் துறை மூலமாக கொடியேற்றுவதற்கான ஏற்பாடுகள், காவல் துறை அணிவகுப்பு, பாதுகாப்பு பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தூய்மை பணி, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்தல், சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் முககவசம், சானிடைசர் வழங்குதல், சுகாதாரத் துறை மூலம் மருத்துவக் குழு, 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்தல் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டது.

கலைநிகழ்ச்சி கிடையாது

மேலும் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் மந்தாகினி, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) அஜீதாபேகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story