கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கன்னியாகுமரி பகுதியில் முழு சுய ஊரடங்கு


கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கன்னியாகுமரி பகுதியில் முழு சுய ஊரடங்கு
x
தினத்தந்தி 7 Aug 2020 1:32 AM GMT (Updated: 7 Aug 2020 1:32 AM GMT)

கன்னியாகுமரி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முழு சுய ஊரடங்கு நேற்று மாலை முதல் தொடங்கியது. பொதுமக்கள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தி கொண்டு முடங்கினர்.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு முதன் முதலாக சின்னமுட்டம் துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளி மூலம் தொற்று பரவ தொடங்கியது. அதன்பிறகு கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கடற்கரை கிராம மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அதை தடுக்க கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல ஊர் கமிட்டி கூட்டம் தலைவர் நாஞ்சில் மைக்கேல் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், தொற்று பரவலை தடுக்க நேற்று மாலை 5 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கன்னியாகுமரி பகுதியில் முழுசுய ஊரடங்கு கடைபிடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான மருந்து, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளும்படியும், மிக அத்தியாவசிய தேவைக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்றும், மக்கள் தங்களை தனிமைப்படுத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக நேற்று ஆட்டோக்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் அனைத்து மீனவ கிராமங்களிலும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ளதால் விசைப்படகு மீனவர்கள் யாரும் நேற்று முன்தினம் மாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோல வள்ளம் மற்றும் கட்டுமரங்களும் கடற்கரையில் மேடான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

சுய ஊரடங்கு மறுஉத்தரவு வரும் வரை நீடிக்கும் என்பதால் நேற்று காலை முதலே காய்கறி, மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இறைச்சி கடைகளிலும் மக்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் போலீசார் ரோந்து சென்று பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினர்.

இந்தநிலையில், கன்னியாகுமரி பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் முழு சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மீனவ கிராமங்களில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சாலைகளில் ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் எதுவும் ஓடாததால் சர்ச்ரோடு, ஆலய வளாகம் உள்பட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடியது. பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் கன்னியாகுமரி பகுதி முழுவதும் முடங்கியது.


Next Story