மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல் + "||" + Woman stabbed to death for flirting with fake boyfriend: Husband hysterical

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில், 

நாகர்கோவிலில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 49). இவருடைய மனைவி நீலாவதி (43). இவர்களுக்கு 18 வயதில் மகன் இருக்கிறார். வீட்டின் கீழ் தளத்தில் ராமதாஸ் மரக்கடை நடத்தினார். மேல்தளத்தில் குடும்பத்துடன் வசித்தார்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீலாவதியின் நடத்தையில் ராமதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராமதாஸ் தனது மனைவியை விட்டு பிரிந்து மேல ஆசாரிபள்ளத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் குடியேறினார். மகனை, மனைவியுடன் விட்டு செல்ல மனமில்லாமல் அவரை தன்னுடனேயே அழைத்துச் சென்று விட்டார். நீலாவதி மட்டும் வசந்தம் நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். அதே சமயத்தில், மனைவி வசித்து வந்த வீட்டின் கீழ்தளத்தில் ராமதாஸ் தொடர்ந்து மரக்கடையை நடத்தி வந்தார்.

இத்தகைய பிரச்சினைக்கு இடையே நேற்று காலை நீலாவதி அவருடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி மற்றும் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு நீலாவதி கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

அவருடைய உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவரை கொலை செய்தது யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

பின்னர் போலீசார் நீலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் அக்கம், பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில், நள்ளிரவு வீட்டில் பயங்கர சத்தம் கேட்டதாகவும், நீலாவதிக்கும், அவருடைய கணவர் ராமதாசுக்கும் பிரச்சினையாக இருக்கலாம் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மனைவியை கொன்றதாக ராமதாஸ் ஆசாரிபள்ளம் போலீசாரிடம் சரண் அடைந்தார். மனைவியை கொன்றது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் ராமதாசிடம் விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மனைவியுடன் வேறொருவர் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த ஆத்திரத்தில் ராமதாஸ் கொலை வெறிச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் இதுபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியானது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ராமதாசுக்கு, அதன் பிறகும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. மனைவி நீலாவதி வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் தொடர்ந்து மரக்கடையை அவர் நடத்தினார். இதனால் கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இது மேலும் அவர்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தியது. தொடர்ந்து இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் நீலாவதி புகார் கொடுப்பதும், பின்னர் ராமதாசை அழைத்து போலீசார் விசாரணை நடத்துவதுமாக சம்பவம் அரங்கேறியது. இதற்கிடையே அவர்களுக்கிடையே விவாகரத்து தொடர்பான வழக்கும் நிலுவையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கணவர் நிரந்தரமாக தன்னை பிரிந்து சென்று விடுவார் என நினைத்த நீலாவதி தவறான பாதையை தேர்ந்தெடுத்தார். அதாவது, அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், நீலாவதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இரவு நேரத்தில் இருவரும் அந்த வீட்டில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.

மனைவியின் கள்ளக்காதல் அரசல், புரசலாக ராமதாசுக்கும் தெரியவந்தது. மேலும், அக்கம் பக்கத்தினர் ராமதாசை சந்தித்து மனைவியின் நடத்தையை பற்றி தவறாகவும் பேசி உள்ளனர். 18 வயதில் மகன் இருக்கும் நிலையில், தன்னுடைய மனைவி இப்படி அசிங்கப்படுத்துகிறாளே என்று வெளியேயும் சொல்ல முடியாமல், அவர் மனதிற்குள் புலம்பி வந்துள்ளார்.

மனைவியின் மீது அவருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு நீலாவதி வீட்டில் ஒரு வாலிபரின் சத்தம் கேட்டது. தற்செயலாக மரக்கடைக்கு வந்த ராமதாசின் மகன், இந்த சத்தத்தை கேட்டுள்ளார். மேலும், வீட்டில் மின்விளக்கு எரிந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்து நீலாவதியின் கள்ளக்காதலன் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. தாயாருடன் உல்லாசமாக இருந்து தப்பி ஓடிய கள்ளக்காதலனை மகன் பிடிக்க முயன்றான். ஆனால் கள்ளக்காதலன் தப்பி ஓடி விட்டார்.

பின்னர் தாயார் நீலாவதியை கண்டித்துள்ளார். மேலும், தனது தந்தை ராமதாசுக்கும் இதுபற்றிய தகவலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த அவருக்கு, மகன் கொடுத்த அதிர்ச்சி தகவலை கேட்டதும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார். மனைவியின் வீட்டுக்கு ஆவேசத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு ராமதாஸ் சென்றார்.

அங்கு மனைவியை கண்டதும் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்த நீலாவதி அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வீடு முழுவதும் ரத்தம் சிதறியது. மனைவியை கொடூரமாக கொன்ற ராமதாஸ் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.மேலும் இதுதொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாசை கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆசிரியரின் தேர்வுகள்...