புதிதாக 250 பேருக்கு தொற்று உறுதி: நெல்லையில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது


புதிதாக 250 பேருக்கு தொற்று உறுதி: நெல்லையில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 7 Aug 2020 1:50 AM GMT (Updated: 7 Aug 2020 1:50 AM GMT)

நெல்லையில் புதிதாக 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. தூத்துக்குடியில் மேலும் 3 பேர் பலியானார்கள்.

தென்காசி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தை எட்டி வந்தது. கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் காய்ச்சல் மற்றும் சளி மாதிரி சேகரிப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று குரும்பூர் அருகே உள்ள மணத்தியை சேர்ந்த 70 வயது முதியவர், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த 67 வயது முதியவர், நந்தகோபாலபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளனர். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்து உள்ளது.

239 பேர் பாதிப்பு

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 239 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 450 ஆக அதிகரித்து உள்ளது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 557 ஆக உயர்ந்து உள்ளது. 1,832 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 250 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 6 ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 ஆயிரத்து 732 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 179 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். இதில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 104 பேரும், சித்தா கல்லூரியில் 23 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்ற அனைவரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்கள்.

மேலும் நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு சிகிச்சை மையங்களில் 2 ஆயிரத்து 274 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,720 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். 870 பேர் தென்காசி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story