சேலம் மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்: ஆணையாளர் சதீஷ் தகவல்
சேலம் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநகரில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் 56 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் உரிய கால இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, பொதுமக்களின் நலன் கருதி குளோரின் கலந்து பாதுகாப்பான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள், சிமெண்டு தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், காலி டப்பாக்கள் உள்ளிட்ட மழைநீர் தேங்கும் பொருட்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும். மேலும் அனைத்து நிறுவனங்களிலும் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 700-க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்புறங்களில் உள்ள இடங்களில் பார்வையிட்டு தேவையற்ற பொருட்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அனைத்து நீர் வழித்தடங்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சிறிய ஓடைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு கண்டறிந்து அகற்றுபவர்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவன வளாகங்களில் மேல் மற்றும் கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பூந்தொட்டிகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் நீர் தேக்கி வைக்கக் கூடிய பாத்திரங்கள் போன்றவற்றில் மழைநீர் மற்றும் குப்பைகள் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story