வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் உள்பட 199 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது


வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் உள்பட 199 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 7 Aug 2020 7:43 AM IST (Updated: 7 Aug 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக உதவியாளர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள் உள்பட 199 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,955 ஆக உயர்ந்தது.

வேலூர்,

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக உதவியாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், அலுவலக உதவியாளர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. அதில், அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர், நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வேலூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடையில் பணிபுரியும் 168 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளிமாதிரி சேரிக்கப்பட்டது. அதில், ஜவுளிக்கடையில் பணிபுரியும் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அந்த கடைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கிருமிநாசினி தெளித்து மூடப்பட உள்ளது.

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் காவலர்கள் சிலருக்கு சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி காணப்பட்டது. அவர்களின் சளிமாதிரி பரிசோதனையில் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

6,955 பேருக்கு கொரோனா

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 5 டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் உள்பட 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று தெரிய வந்தது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதைத்தவிர ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை ஊழியர்களின் குடும்பத்தினர் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது.

அதைத்தவிர வேலூர் மாநகராட்சியில் குப்பைகள் சேகரிக்கும் மினிவேன் டிரைவர், அரசு மருத்துவமனை ஊழியர்கள், மாநகராட்சி பகுதியில் மட்டும் 108 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 199 பேர் ஒரேநாளில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 6,955 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story