பவானிசாகர் அணை நீர்மட்டம் 93 அடியை எட்டியது: கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய அறிவிப்பு
பவானிசாகர் அணை நீர்மட்டம் 93 அடியை எட்டியது. இதனால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. இதன் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் மூலம் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது. கடந்த 3-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 1,072 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 85.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 25 ஆயிரத்து 168 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 89.31 அடியாக இருந்தது. நேற்று இரவு 7 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 622 கனஅடி தண்ணீர் வந்தது. மேலும் பில்லூர் அணை நிரம்பியதால் அதில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரத்து 360 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 93.31 அடியை எட்டியது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளளது.
பவானிசாகர் அணை கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் 100 அடியை எட்டியது. தற்போது தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விரைவில் 3-வது முறையாக அணை 100 அடியை எட்டிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும்.
இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணை பகுதியில் இருந்து பவானி கூடுதுறை வரை கரையோரங் களில் வசிப்பவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சத்தியமங்கலம் நகராட்சி சார்பிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
சத்தியமங்கலம் அய்யப்பன் கோவில் படித்துறை பகுதி, விநாயகர் கோவில் படித்துறை, கோட்டுவீராம்பாளையம் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் அமுதா, தாசில்தார் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் தவுசியப்பன் ஆகியோர் சென்று ஒலிபெருக்கியில், பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று அறிவித்தனர்.
Related Tags :
Next Story