மதுரையில் ரூ.304 கோடியில் திட்டங்கள்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்


மதுரையில் ரூ.304 கோடியில் திட்டங்கள்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 7 Aug 2020 5:21 AM GMT (Updated: 7 Aug 2020 5:21 AM GMT)

மதுரையில் ரூ.304 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மதுரை,

மதுரையில் ரூ.304 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 900 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சைக்கு உருவாக்கிய மருத்துவமனையையும் அவர் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கி வருகிறார். அதன்படி அவர் நேற்று காலை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு வந்தார். அவரை மதுரை மாவட்ட எல்லையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதய குமார், கலெக்டர் வினய் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் அவர், மதுரை வடபழஞ்சியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான எல்காட் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட ஆஸ்பத்திரியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அங்கு 900 படுக்கைகள் வசதியுடன், ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளது. அவற்றை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

குறுகிய காலத்தில் தற்காலிகமாக மிகப்பெரிய ஆஸ்பத்திரியை உருவாக்கியது குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். அவரிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

அதன்பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, அங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

முன்னதாக அவர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட சிறிய மேடையில் 2 ஆயிரத்து 411 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மதுரை மாவட்டத்தில் ரூ.304 கோடியே 55 லட்சம் மதிப்பிலான 31 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து ரூ.21 கோடியே 51 லட்சம் மதிப்பில் முடிந்த 32 பணிகளை மதுரை மக்களுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, கொரோனா தடுப்பு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இனி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், நீதிபதி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story