கடலூரில் நடைபெறும் சுதந்திர தின விழாவை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு: கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்


கடலூரில் நடைபெறும் சுதந்திர தின விழாவை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு: கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்
x
தினத்தந்தி 7 Aug 2020 12:31 PM IST (Updated: 7 Aug 2020 12:31 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடைபெறும் சுதந்திர தின விழாவை உள்ளூர் தொலைக்காட்சிகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூர்,

நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடலூரில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சுதந்திர தின விழாவில் பங்கேற்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, சுதந்திர தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு நேற்று மாலை வந்தார். பின்னர் அவர் மைதானத்தை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழாவை கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சுதந்திர தின விழாவை பொதுமக்கள் வீடுகளில் இருந்தவாறே பார்க்கும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் அவர் விழாவில் பொதுமக்கள் கூட்டத்தை குறைப்பது, கொரோனா பணிக்காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களை கவுரவிப்பது குறித்தும், மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுடன் ஆலோசித்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story