சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பண மோசடி நடிகை ரியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை


சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பண மோசடி நடிகை ரியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
x
தினத்தந்தி 8 Aug 2020 1:45 AM IST (Updated: 8 Aug 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் ரூ.15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக அவரது தந்தை அளித்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை நடத்தியது.

மும்பை,

34 வயது இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை கே.கே. சிங் பாட்னா போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தனது மகன் தற்கொலைக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தியே காரணம் என்றும், சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் ரூ.15 கோடி மோசடி நடந்து இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த புகார் தொடர்பாக பாட்னா போலீசாா் தற்கொலைக்கு தூண்டியது, பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அமலாக்கத்துறை விசாரணை

இந்தநிலையில் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் நடந்த பண மோசடி புகாரை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு நேற்று மதியம் மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரியா சக்கரபோர்த்தி ஆஜரானார். அவருடன் விசாரணைக்கு அவரது தம்பி சோவிக் வந்து இருந்தார். ரியா சக்கரபோர்த்தியின் வருமானம், முதலீடு, தொழில் விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதேபோல சுஷாந்த் சிங், ரியா சக்கரபோர்த்தியின் தொழில் மேலாளர் சுருதி மோடியிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுஷாந்த் சிங்கின் ஆடிட்டர் சந்தீப் ஸ்ரீதரிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.

இந்தநிலையில் சுஷாந்த் சிங்குடன் வீட்டில் ஒன்றாக வசித்து வந்த சித்தார்த் பிதானியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து உள்ளது.

நிராகரிப்பு

முன்னதாக பீகார் போலீசார் பதிவு செய்த வழக்கை மும்பைக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை காரணம் காட்டி ரியா சக்கரபோர்த்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு இருந்தார். ஆனால் அமலாக்கத்துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

மேலும் ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாக உள்ளார் என்று பீகார் போலீசார் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story