காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா


காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Aug 2020 2:36 AM IST (Updated: 8 Aug 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருக்கனூர்,

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஏழை, பணக்காரர், அதிகாரி, ஊழியர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் பாதித்து வருகிறது. ஏற்கனவே புதுவையில் பெரியகடை, கோரிமேடு, தவளக்குப்பம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு பாதிப்பு ஏற்பட்டதால், அந்தந்த போலீஸ் நிலையம் 2 நாட்கள் மூடப்பட்டு, மீண்டும் திறந்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு போலீஸ்காரர், ஊர்க்காவல் படை வீரருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் தொற்று பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் மற்றும் ஊர்க்காவல் படை வீரருடன் தொடர்பில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள்

இதில் 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 போலீசாருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் வசித்த பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையம் மூடப்பட்டு, அருகில் உள்ள கோவில் வளாகத்தில் கடந்த 10 நாட்களாக தற்காலிகமாக இயங்கி வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து, மீண்டும் நேற்று திறக்கப்பட்டது.

பாகூர் சப்-இன்ஸ்பெக்டர்

பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது சப்-இன்ஸ்பெக்டருக்கு தொற்று உறுதியானதால், அங்கு பணிபுரிந்து வரும் போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

Next Story