காரைக்கால் கலெக்டருக்கு கொரோனா


காரைக்கால் கலெக்டருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Aug 2020 2:50 AM IST (Updated: 8 Aug 2020 2:50 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட கலெக்டராக அர்ஜூன் சர்மா பணியாற்றி வருகிறார். இவர் கலெக்டர் அலுவலகத்தின் மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு வேலைபார்த்து வந்த பணியாளர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் அர்ஜூன் சர்மா, அவருடைய குடும்பத்தினர், பணியாளர்களுக்கு மாவட்ட நலவழித்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதன் முடிவு நேற்று வெளியானதில் கலெக்டர் அர்ஜூன் சர்மாவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். கலெக்டருக்கு டாக்டர்கள் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி, கவனித்து வருகின்றனர்.

அதிகாரிகள் கலக்கம்

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் சரண்யாவிற்கு கடந்த 5-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் அர்ஜூன்சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ், கல்வித்துறை அதிகாரி அல்லி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தற்போது கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அனைவரும் ஒருவாரத்துக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதனால் பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தொற்று 258 ஆனது

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 171 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 85 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் நலவழித்துறை சார்பில் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது.

Next Story