துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.18½ லட்சம் தங்கம் கடத்தல்


துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.18½ லட்சம் தங்கம் கடத்தல்
x
தினத்தந்தி 7 Aug 2020 10:48 PM GMT (Updated: 7 Aug 2020 10:48 PM GMT)

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் விளையாட்டு கார், கைக்கடிகாரங்களில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.18½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் துபாயில் சிக்கி தவித்தவர்களை அழைத்துக்கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறப்பு விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்தவர்கள் மருத்துவம், குடியுரிமை சோதனைகள் முடித்துக்கொண்டு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் அந்த விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சங்கர்(வயது 50) என்பவரது உடைமைகள் நேற்று விமான நிலையம் வந்திருந்தது. இதை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ரூ.18½ லட்சம் தங்கம்

அதில் குழந்தைகளின் விளையாட்டு பொம்மை கார் மற்றும் 4 கைக்கடிகாரங்கள் இருந்தன. சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விளையாட்டு கார் மற்றும் கைக்கடிகாரங்களை பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 388 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள சங்கரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story