சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் இந்த ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரிகள் செயல்படும் முதல்-அமைச்சர் பேச்சு


சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் இந்த ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரிகள் செயல்படும் முதல்-அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 8 Aug 2020 5:04 AM IST (Updated: 8 Aug 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் இந்த ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரிகள் செயல்படும் என்றும், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இறப்பு விகிதம் குறைவு

கொரோனா நோய் தடுப்பிற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை அதிக அளவு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 71 ஆயிரத்து 499 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 44 ஆயிரத்து 698 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

தொற்று பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம். இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது. நெல்லை. தென்காசி மாவட்டங்களில் தேவையான மருத்துவ உப கரணங்கள், மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளது. தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு படுக்கை வசதிகள் உள்ளன. தொய்வில்லாமல் சிறப்பாக பணிகள் நடந்து வருகின்றன. தேவையான அளவுக்கு செவிலியர்கள் பணியில் உள்ளனர். காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மட்டும் அல்லாமல் மற்ற நோய்களுக்கும் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள்

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அரிசி அட்டை வைத்து இருப்பவர்களுக்கு அரிசி, சர்க்கரை, எண்ணெய் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் பணியாற்றிய வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு செலவிலேயே தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விவசாய பணிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடந்து வருகிறது. 100 நாள் வேலை திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.

தொழில் முனைவோர் மாநாடு

தொழில் துறை வளர்ச்சிக்காக கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலித தொழில் முனைவோர் மாநாடு நடத்தினார். பல பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் தொழில் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு உள்ளன. படிப்படியாக பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க நமது மாநிலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை சீரமைக்கும் அற்புதமான திட்டம் குடிமராமத்து திட்டம். தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாக கடலில் கலக்காமல் தடுக்கப்படுகிறது.

அரசு கலைக்கல்லூரிகள்

மழைநீர் கடலில் கலக்காமல் தடுக்கும் வகையில், ரூ.1,000 கோடியில் ஓடைகள், நதிகளின் குறுக்கே தடுப்பனைகள் கட்டப்பட்டு வருகிறது. சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டமும், ஆலங்குளம், சங்கரன்கோவிலில் புதிய அரசு கலைக்கல்லூரிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. அந்த கல்லூரிகள் இந்த ஆண்டு முதல் செயல்படும்.

நெல்லை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை அளிக்க ரூ.21 கோடியில் புதிய கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரசை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அமைச்சர்-எம்.எல்.ஏ.க்கள்

கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கலெக் டர்கள் ஷில்பா (நெல்லை), அருண்சுந்தர் தயாளன் (தென்காசி), எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், ரெட்டியார்பட்டி நாராயணன், முருகையா பாண்டியன், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (நெல்லை), சுகுணாசிங் (தென் காசி),, உதவி கலெக்டர்கள் மணீஷ் நாரணவரே (நெல்லை), பிரதீக் தயாள் (சேரன்மாதேவி), நெல்லை மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை மாநகராட்சி ஆணை யாளர் கண்ணன், நகராட்சி நிர்வாக நெல்லை மண்டல இயக்குனர் சுல்தானா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Next Story