நொய்யல் ஆற்றில் கலந்து வரும் சாயக்கழிவு நீரால் பயிர்கள் பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை


நொய்யல் ஆற்றில் கலந்து வரும் சாயக்கழிவு நீரால் பயிர்கள் பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Aug 2020 5:40 AM IST (Updated: 8 Aug 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல் ஆற்றில் கலந்து வரும் சாயக்கழிவு நீரால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல், 

நொய்யல் ஆறு கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் தொடங்கி திருப்பூர் மாவட்டத்தை கடந்து கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. திருப்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருந்த சாயப்பட்டறை கழிவுநீரை ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழைநீர் வரும்போது, அதனுடன் கலந்து விடுவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதிகளை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றில் வரும் மழைநீருடன் சாயக்கழிவு கலந்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால், நொய்யல் ஆற்றின் சாயக்கழிவு நீர் காவிரியில் கலக்கும்போது, காவிரி ஆற்றில் செல்லும் தண்ணீர் சாயக்கழிவு நீராக செல்கிறது.

மேலும் நொய்யல் ஆற்றில் இருந்து பாசனம் செய்யும் விவசாயிகள், அந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள ஆழ்துளைக்கிணறு மற்றும் கிணறுகளில் உள்ள குடிநீரும் சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதால் காவிரி கரையோரம் உள்ள குடிநீர் தொட்டிகளிலும், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளிலும் உள்ள தண்ணீர் மாசுபட்டுள்ளது.

பொதுமக்கள் ஆற்றில் குளித்துவிட்டு செல்லும்போது உடலில் ஒருவிதமான அரிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் இத்தண்ணீரில் தொடர்ந்து குளித்து வந்தாலும், இத்தண்ணீரை குடிப்பதாலும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வரும் அபாயம் உள்ளது.

இது குறித்து நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் நொய்யல் ராமசாமி கூறுகையில், தற்போது நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளப்பெருக்கு நீரை பரிசோதனை செய்தபோது உப்பின் தன்மை 2,100 டி.டி.எஸ். என உள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீரை பரிசோதனை செய்தபோது உப்பின்தன்மை 68 டி.டி.எஸ். என இருந்தது. நொய்யல் ஆற்றில் ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருக்கும் சாயக்கழிவு நீரைத் திறந்து விடுகின்றனர். இதனால் தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் கரும்பு, வாழை, நெல் போன்ற பணப்பயிர்கள் காய்ந்து வருகின்றன. அது விவசாயம் செய்ய உகந்த தண்ணீர் அல்ல. எனவே மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும், என்றார். மேலும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் மற்றும் காவிரி ஆற்று பாசன விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று நொய்யல் சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story