பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியை எட்டியது


பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியை எட்டியது
x
தினத்தந்தி 8 Aug 2020 9:27 AM IST (Updated: 8 Aug 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியை எட்டியது.

பவானிசாகர், 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. இதன் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால்களுக்கும், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கும் செல்கிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 622 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 93.31 அடியாக இருந்தது.

நேற்று மாலை 5 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 178 கனஅடி தண்ணீர் வந்தது. மேலும் பில்லூர் அணை நிரம்பியதால் அதில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரத்து 680 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 96.81 அடியை எட்டியது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் பவானிசாகர் அணைப்பிரிவு உதவி பொறியாளர் சிங்கார வடிவேலன் தலைமையில் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Next Story