ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் 12 மணி வரை செயல்பட அனுமதி
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. பின்னர் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து வ.உ.சி. பூங்கா மைதானத்திற்கு நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரமும் நடத்த மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது. பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் கூடுதல் நேரம் மார்க்கெட் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மார்க்கெட்டில் அதிக அளவில் கூட்ட நெரிசல் நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று முதல் மார்க்கெட் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரவேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story