மதுரையில் ஒரே நாளில் 184 பேர் குணம் அடைந்தனர்: புதிதாக 109 பேருக்கு நோய் தொற்று


மதுரையில் ஒரே நாளில் 184 பேர் குணம் அடைந்தனர்: புதிதாக 109 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 8 Aug 2020 11:04 AM IST (Updated: 8 Aug 2020 11:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஒரே நாளில் 184 பேர் குணம் அடைந்தனர். புதிதாக 109 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மதுரை, 

மதுரையில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்றும் ஒரே நாளில் 184 பேர் குணம் அடைந்தனர். புதிதாக 109 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மதுரையில் கடந்த சில தினங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்படி மதுரையில் நேற்று புதிதாக 109 பேருக்கு மட்டுமே நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 65 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 7 பேர் பாதிக்கப்பட்டனர்.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 798 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 1,786 ஆக குறைந்திருக்கிறது. கடந்த சில தினங்களாகவே 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த உள்நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. நேற்று மட்டும் 184 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனுடன் சேர்ந்து மதுரையில் குணமடைந்து வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கையும் 9 ஆயிரத்து 733 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும், மற்றொருவர் அரசு ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தார்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் உயிரிழப்பு எண்ணிக்கை 278 ஆனது.

நேற்று வெளியான மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியலில் சென்னை-984 என முதல் இடத்திலும், திருவள்ளூர்-388 என 2-வது இடத்திலும் மதுரை-109 என 20-வது இடத்திலும் இருந்தது.


Next Story